Saturday, 25 September 2021

Nan oru kadhai chollava ?

1955ம் வருடம் எனக்கு திருமணம் நடந்த போது  என் கணவர் LIC யில் வேலையாய் இருந்தார். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வேறு ஊருக்கு மாற்றம். அதுவும் எனக்கு பரிச்சயம் இல்லாத வட மானிலதிறக்கே  மாற்றி விடுவார்கள். கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் பாஷை, பழக்க வழக்கங்கள், தட்ப வெப்ப நிலை, உணவு பொருட்கள் எல்லாமே வித்யாசம், விசித்திரம்!

எனக்கு 1956ம் ஆண்டு பிந்துவும், 1958ம் ஆண்டு ஷங்கரும் பிறந்தார்கள். இதற்கிடையில், கான்பூர், காசி, மீரட் என்று பல ஊர்களுக்கு மாற்றம்.

1961ம் ஆண்டு, மீரட்ல்   இருந்து ரூர்கிக்கு மாற்றம் ஆகியிருந்தது. வழக்கம் போல் சாமான்களை வண்டியில் ஏற்றி அனுப்பி விட்டு நாங்கள் ரயில் ஏறி வந்து சேர்ந்தோம். புதிய ஊராக இருந்தாலும் மாற்றம் ஆகிய மறு நாளே என் கணவர் வேலையில் சேர்ந்து ஆக வேண்டும். அதனால் லாரியில் வரும் சாமான்களை இறக்கி வைத்து வீட்டை அமைத்து, சமையலுக்கு ஆன சாமான்களை  வாங்கி, சமையல் செய்து குழந்தைகளை பார்த்துக்கொள்வது எல்லாம் என்னுடைய கடமை.

வழக்கம் போல் என் கணவர் மரறு  நாள் காலை  சைக்கிள் ஏறி ஆபீஸ் போய் சேர்ந்தார் . நானும் வழக்கம் போல் வந்து இறங்கி இருக்கும் சாமான்களை எடுத்து வைக்கும் பணியில் இறங்கினேன். வேலை கவனத்தில் குழந்தைகளளை கவனிக்க வில்லை. பிந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை கவனித்தேன். ஷங்கர் எங்கே? சுற்றும் முற்றும் பார்த்தேன் தென் படவில்லை. பிந்துவிடம் கேட்டேன். அவளுக்கும் தெரியவில்லை, வெளியிலும் பின் புறத்திலும் சென்று பார்த்தேன் இல்லை. சாமான்களுக்கு இடையில் தூங்கி கொண்டு இருப்பானோ என்று பார்த்தேன். அங்கும் இல்லை. எனக்கு பீதியும் பதட்டமும் உண்டாகியது. புதிய ஊர். யாரையும் தெரியாது, பாஷயும் புரியாது, யாரை கேட்பது, எங்கு போய் தேடுவது? இன்று போல் போன் வசதியும் கிடையாது,

தலை விரிகோலமாக தெருவில் ஓடி, ஷங்கர் ஷங்கர் என்று கத்தி கொண்டு இங்கும் அங்கும் அலைந்தேன். பார்த்தவர்களிடம் "3 இயர் பச்ச கண்டோ" என்று எனக்கு தெரிந்த பாஷயில் கேட்டு கொண்டு நடந்தேன். அவன் எங்கும் தென் படவில்லை.

துக்கம் நெஞ்சை அடைக்க குருவாயூரப்பா, என் மகனை என்னிடம் கொண்டு சேர்த்துவிடு உன் கோயிலில் மணி வாங்கி காட்டுகிறேன் என்று வேண்டிக்கொண்டேன்.  அழுகையும் பயமும் தாங்காமல் வீடு வந்து சேர்கையில் சற்று தொலைவில்...யார் அது? ஷங்கரே தான்!  கட்டை விரலை சூப்பிக்கொண்டு யாரோ ஒரு பய்யன் கையை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான். நான் அன்று பெற்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த காட்சி இன்னும் என் மனதில் நிற்கிறது.

ஷங்கரை கூட்டிக்கொண்டு வந்த அந்த பய்யன் யார்?  விசாரித்ததில், அவன் முன் தினம் நாங்கள் வந்து இறங்கியதை பார்த்தானாம். அந்த ஊரில் நாங்கள் ஒருவார்தான் "மதராஸி' அதனால் அவன் மனதில் அது பதிந்திருந்ததாம். ஷங்கர் ஏதோ கரும்பு வண்டியை துரத்திக்கொண்டு 3 தெருவிற்கு அப்பால் ஓடுவதை பார்த்தானாம்.  இந்த மதராஸி பச்சா இங்கே ஏன் வந்தான் என்று  வீட்டிற்கு அழைத்து வந்தானாம். இதை நான் நம்பவில்லை!

 நான் வேண்டிய குருவாயூர் அப்பன் தான் இந்த பையன் உருவில் வந்தான் என்று தான் இன்றும் நான் நம்புகிறேன்.

No comments:

Post a Comment